Saturday, June 7, 2008

மதுரையில் சுழன்றது சூறாவளி : நொறுங்கியது பள்ளி


மதுரையில் நேற்றுமுன்தினம், சுழன்றடித்த சூறாவளிக் காற்றில் 60 வயது மரம் விழுந்து பள்ளிக் கட்டடம் நொறுங்கியது. பள்ளி முடிந்த நேரம் என்பதால், அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர்தப்பினர். மதுரை ஐராவதநல்லூர் ஆர்.சி., துவக்கப்பள்ளியில் 300 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்றுமுன்தினம் மாலையில் திடீரென பலத்த காற்று வீசியது. சுழன்றடித்த சூறாவளிக்கு சில வீடுகளில் ஓடுகள் பறந்தன. மரங்கள் ஆங்காங்கே முறிந்துவிழுந்தன. ஆர்.சி., பள்ளியின் வளாகத்தில் நின்றிருந்த, 2 வாகை மரங்கள் வேருடன் சாய்ந்தன. இதில் ஒரு மரம் கட்டடத்தின் மீது விழுந்து, 3 வகுப்பறைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. மாலை 5 மணிக்கு சம்பவம் நடந்ததால், மாணவர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் உயிர்தப்பினர்.நேற்று முன்தினம் முதல், மாணவர்கள் வளாகத்தில் உள்ள சர்ச் மற்றும் மர நிழல்களில் பாடம் படிக்கின்றனர்.

தாளாளர் பாதிரியார் சிப்ரியான் கூறுகையில், "பள்ளி மாலை 4.05மணிக்கு முடிந்துவிட்டது. கடவுள் கிருபையால் சம்பவம் நடந்தபோது, மாணவர்கள் யாரும் வகுப்பில் இல்லாதது அதிர்ஷ்டமே. 2 நிமிடங்களே சுழன்றடித்த காற்றில், இந்த வளாகத்தில் மட்டுமல்ல அருகில் பல மரங்கள் முறிந்துவிழுந்துள்ளன. பக்கத்து வயலில், 27 தென்னை மரங்களும் முறிந்துவிட்டன. சேதம் குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். விரைவில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்' என்றார்.


நன்றி தினமலர்

No comments: