இது 'இருபதுக்கு இருபது' சீசன் போலும்... ரஜினிகாந்துக்கும் ஐபிஎல்-லுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவருக்கும் 'இருபதுக்கு இருபது'க்கும் தொடர்பு உண்டு. ரஜினிகாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் 'குசேலன்' படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. "சினிமா சினிமா சினிமாதான், எம்ஜிஆரு, சிவாஜி சாரு, என்டிஆரு, ராஜ்குமாரு வந்ததிந்த சினிமாதான்..." என்று தொடங்கும் வாலி எழுதிய ரஜினியின் அறிமுக பாடல், ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. இந்நிலையில், ரஜினிக்கு எஞ்சியுள்ள நயன்தாராவுடனான டூயட் பாடல் கேரள மாநிலம் ஆலப்புழையில் அடுத்த வாரம் எடுக்கப்படவுள்ளது. இங்கேதான் 'இருபதுக்கு இருபது' விஷயம் ஆரம்பமாகிறது. "ஓம் ஸாரிரே ஸாரே ஸாரே, போக்கிரிராஜா பொல்லாதவன் நீதான் ஸாரே ஸாரே..." என்று தொடங்கும் பாடலில் 20 வித கெட்டப்புக்களில் ரஜினி நடிக்கிறார். இந்தப் பாடலில், ரஜினி நடித்த 20 படங்களின் தலைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவே 'இருபதுக்கு இருபது'! குசேலனை ஜூலை 15-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.